இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது
இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் காண்பிக்கிறது. நீண்ட காலமாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. இந்நிலையில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு அத்தகைய அநாவசியமான அச்சங்கள் களையப்படவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) நாட்டை வந்தடைந்திருக்கும் நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ந வேளையில், மிக அவசியமானதொரு தருணத்தில் இந்தியா எமக்கு உதவ முன்வந்தது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து என்பன உள்ளடங்கலாக இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகள் எமது நாட்டின் பொருளாதாரம் சிதைவடைவதைத் தடுத்தன. குறிப்பாக இந்தியா எமது இறையாண்மைக்கு மதிப்பளித்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் உண்மையான பிராந்திய நட்புறவு எவ்வாறிருக்கும் என்பதைக் காண்பித்தது.
தற்போது உலகளாவிய ரீதியில் இந்தியாவின் நிலை வலுவடைந்துவருவதுடன், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து வலுவாக மீண்டுவருகிறது. நாம் இப்போது மிகமுக்கிய திருப்புமுனையில் இருக்கிறோம். நெருக்கடியான தருணத்தில் உருவான ஒத்துழைப்பை வர்த்தகம், முதலீடு, சக்திவலு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைசார் ஒத்துழைப்பின் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான நிலையான கூட்டிணைவாகக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு எம்முன் இருக்கிறது.
இலங்கையில் ஏற்கனவே இந்திய உதவியுடன் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தைக் காண்பிக்கிறது.
இந்நிலையில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு அநாவசியமான அச்சங்கள் களையப்படவேண்டும். நீண்ட காலமாக உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. ஆனால் தற்போது இந்தியாவின் எழுச்சி என்பது எமக்கு அச்சுறுத்தல் அல்ல, மாறாக அதுவொரு சிறந்த வாய்ப்பு என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம்.
இரண்டாம் உலகமகாயுத்தத்தினால் ஏற்பட்ட மிகப்பாரதூரமான அழிவின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் நல்லிணக்கத்தையும், ஒத்துழைப்பையும் தேர்ந்தெடுத்தன. முன்னர் விரோதிகளாகத் திகழ்ந்த நாடுகள் ஒன்றிணைந்து, சந்தேகத்தைக் களைந்து, அடுத்துவரும் தலைமுறைகளின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை உறுதிசெய்யக்கூடிய கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்பின. இந்திய விவகாரத்தில் இலங்கையும் இதனையே செய்யவேண்டும். தயக்கம் மற்றும் அச்சத்துடனன்றி, தெளிவுடனும் இராஜதந்திர ரீதியாகவும் இதனைச் செய்யவேண்டும்.
இதன் அர்த்தம் நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்தல் என்பதல்ல. மாறாக அறிவுபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பின் ஊடாக இறையாண்மையை மேலும் வலுப்படுத்தல் என்பதே இதன் அர்த்தமாகும். எமது எதிர்காலம் பரஸ்பர கௌரவம், பகிரப்பட்ட அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பப்படட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.