ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் விரைவில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளிடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் 4 அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளன.
அமெரிக்காவும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் பிற நாடுகளின் வான் எல்லை வழியாக அந்த நாட்டின் விமானங்கள் பறக்க வேண்டும்.
இப்படியான சூழலில் தான் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன. அதாவது அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையையொட்டிய தங்களின் வான் எல்லையில் 2 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்துள்ளன.
இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது தற்காலிகமாக 2 நாட்கள் மட்டும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த தடை என்பது நீட்டிப்பு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை அமெரிக்காவின் மூத்த அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
‛‛ஈரானை தாக்கும் நோக்கத்தில் அரபு நாடுகளின் வான் எல்லையில் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை என்பது வான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு மட்டுமின்றி எரிபொருள் மாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதேவேளை ஏற்கனவே காஸா மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காஸாவின் நிலைமை மோசமாகி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுபோன்ற நிலைமை ஈரானில் நடைபெற கூடாது என்பதற்காக அவர்கள் அமெரிக்காவை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் தான் அமெரிக்கா அதிகாரிகள், சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இராணுவ தளபாடங்கள் விற்பனை தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
கத்தாருக்கு எம்க்யூ -9 ரியப்பர் ட்ரோன் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது. சவூதி அரேபியாவுக்கு ரொக்கெட் மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் ஈரான் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளின் ஆதரவு என்பது அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே தான் அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது