Our Feeds


Wednesday, April 9, 2025

Zameera

வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை


 

அமெரிக்க வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என எதிர்கட்சித் தலைவர்

 

சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


சிலாபம் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கும் வளம் பெறுவதற்கும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அவசியம் என்பது முழு உலகமும் ஏற்றுக்கொண்ட பொருளாதார உண்மையாகும்.


 இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தொலைநோக்குப் பார்வையுடன் 1990 களில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார். 


முதல் கட்டமாக 200 ஆடை தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்தார். இத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதிகளில் அரசாங்கத்தை இழிவுபடுத்தியவர்கள் இருந்த போதிலும், இன்று 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாகவும் ஒரு மில்லியன் பேர் மறைமுகமாகவும் இத்துறையில் வேலை வாய்ப்புகளையும் நன்மைகளையும் பெறுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கு அதிக வரி விதிப்பார் என்பதை சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் நன்கு புரிதல் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி அறிந்து எச்சரிக்கை விடுத்தது. 


ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு, இலங்கையும் கடுமையான வரி விதிப்பை எதிர்கொள்ளும் என்று அரசுக்கு நாம் விளக்கமளித்தோம். இலங்கை நாட்டின் ஏற்றுமதிக்கு 44% தீர்வை வரியை ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இலங்கை நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செயப்படுகின்றன. மேலும், தேயிலை, இரப்பர் மற்றும் பிற மீன்பிடி பொருட்களும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 


44% தீர்வை வரியால் முந்தைய விலையில் போட்டித்தன்மையுடன் எம்மால் விற்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னரும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் இது குறித்து நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால் அரசாங்கம் ஆணவமான பதில்களை வழங்கியதுடன் சுட்டிக்காட்டிய விடயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


சில மாதங்களுக்கு முன்னர் இதனை எடுத்துரைத்த போது அலட்சியப்படுத்திய இந்த அரசாங்கம், பாராளுமன்றத்தில் பேசுவதற்குக் கூட வாய்ப்பளிக்காமல் ஒலிவாங்கிகளை துண்டித்தும், எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்தும் கொண்டிருந்தனர். 


வதந்திகளை பரப்ப வேண்டாம் என எம்மை பார்த்து கூறினர். இதுபோன்ற அற்ப செயல்களைச் செய்ததில் அவர்கள் மகிழ்ச்சியடையந்திருக்க கூடும். உண்மை என்னவென்றால் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் 44% தீர்வை வரி அமுலுக்கு வர இருக்கிறது. இதனால் நாடு பாதிப்புகளை சந்திக்கும். இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவர். குழுக்களை அமைப்பதன் மூலம் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »