Our Feeds


Sunday, April 13, 2025

Sri Lanka

சீனாவில் பலத்த காற்று | உடல் எடை குறைந்தவர்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவிப்பு.



வடக்கு சீனா மற்றும் பெய்ஜிங்கை நேற்று (12) தாக்கிய சூறாவளி காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


நேற்று (GMT 03:30 நிலவரப்படி), பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வார இறுதி முழுவதும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதன் விளைவாக, அதிகாரிகள் மில்லியன் கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் நாட்டில் உள்ள சில ஊடகங்கள் "50 கிலோ கிராம்களுக்குக் குறைவான எடையுள்ளவர்களை எளிதில் அடித்துச் செல்ல முடியும்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.


சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்தின் அதிவேக சுரங்கப்பாதை மற்றும் சில அதிவேக ரயில் பாதைகள் உள்ளிட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அச்செய்திகள் தெரிவித்துள்ளன.


இதனால், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த காற்றுக்கான முதல் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சீன வானிலை நிர்வாகத்தின் கூற்றுப்படி, தற்போதைய நிலைமை கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மேலும் நிலைமை மோசமடைந்தால், அது கடுமையான அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும், தற்போதைய நிலைமை இன்று சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »