Our Feeds


Tuesday, April 1, 2025

SHAHNI RAMEES

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்! - பாட்டலி சம்பிக்க



பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட

மின்விநியோக தடையால் மின்சார சபை 830 கோடி ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது. இந்த நட்டத்தை முகாமைத்துவம் செய்ய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம்  அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


ஹோமாகம கொடகம பகுதியில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


பெரிய அரசியல் கட்சிகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஹோமாகம தேர்தல் தொகுதியில் 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றன.


மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் இந்த தேர்தல் தொகுதியில் வெற்றிப்பெறவில்லை. ஆகவே பாரம்பரியமான அரசியல் கட்சிகளுக்கு இனி இடமில்லை.


30 வருடகாலமாக  அரசியில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தான்  ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் மக்கள் மனங்களில் வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியே மக்கள் விடுதலை முன்னணி 3 சதவீத வாக்கினை 42 சதவீதமான அதிகரித்துக் கொண்டது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.


ஆட்சிக்கு வந்தவுடன் 30 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.


அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடுமையான தலையீட்டினால் தான் அண்மையில் மின்கட்டணம் குறைக்கப்பட்டது.


கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. பாணந்துறை பகுதியில் மின்பிறப்பாக்கியின் மீது குரங்கு தாவியதால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர்  குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் கருத்து நிராகரிக்கத்தக்கது. இந்த மின்விநியோக துண்டிப்பால் இலங்கை மின்சார சபை  830 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.


மின்சார சபையின் இந்த நட்டத்தை  முகாமைத்துவம் செய்வதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியமும் மின்கட்டணம் அதிகரிப்பு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளது என்றார்.


  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »