Our Feeds


Wednesday, April 2, 2025

Sri Lanka

“காதி” நீதிபதிக்கு கடூழிய சிறை தண்டனை - அம்பாறை நீதவான் நீதிமன்றம் அதிரடி - நடந்தது என்ன?



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இறக்காமம் காதி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. 


இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி பாறுக் ஷாஹீப் என்பவருக்கே இவ்வாறு ஒரு மாத காலம் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதியான சட்டத்தரணி எஸ்.எல். பாறுக், நீதிமன்ற சிறைக்கூடத்திற்குள் சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பொறுப்பிலிருந்த சிறைக் கைதியிடம் சில மாதங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்தமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 


இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மேலதிக ஆலோசனை உரிய தரப்பினரிடம் பெறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கு தவணை செவ்வாய்க்கிழமை (1) விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளை, சந்தேக நபரான இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அம்பாறை நீதிமன்ற நீதவானினால் ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 


மேலும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதி தொடர்பில் தாபரிப்பு செலவு, பிள்ளைச்செலவு மோசடி, தகாத வார்த்தை பிரயோகம், நிகழ்நிலை பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-அம்பாறை நிருபர் ஷிஹான்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »