ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று
வியாழக்கிழமை கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது. 'தொலைதூரம் காண்போம் : அணி திரள்வோம் : எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று மதியம் 1 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கான பத்திரங்களை சமர்ப்பிக்கப்படவுள்ளன. தொடர்ந்து அவரால் மாநாட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து கட்சியின் நடப்பாண்டுக்கான அலுவலர்கள் குழாம் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், தவிசாளர், பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாலர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர். எனினும் தற்போது காணப்படும் இந்த பதவிகளில் மாற்றங்கள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் பிரதி பதவிகளில் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்வாண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்படவுள்ளனர். கட்சியின் மாநாட்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, புதிய தலைவரின் விசேட உரையும் இடம்பெறவுள்ளது.
மாநாட்டு தீர்மானங்கள் 4 முன்வைக்கப்படவுள்ளன. அவற்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல், தேசிய பாதுகாப்பு, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு, பிரிவினைவாத அரசியல் அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.