Our Feeds


Friday, April 4, 2025

SHAHNI RAMEES

மோடி இன்று இலங்கைக்கு!

 

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஞாயிறு வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.



இவ்விஜயத்தின்போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.



இலங்கையில் தங்கியிருக்கும்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரத்துக்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடக்கி வைப்பார்.



இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.



பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.



பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் இன்று கைச்சாத்திடப்படலாமெனத் தெரிகிறது.சம்பூரில் மின் திட்டமொன்றை ஆரம்பிக்க திருகோணமலைக்கு பிரதமர் செல்லவிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களையொட்டி அவர் அங்கு செல்லமாட்டாரெனச் சொல்லப்பட்டது.



கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி நாளை சனிக்கிழமை சந்திக்கவுள்ளார்.



முன்னதாக இலங்கை புறப்பட முன்னர் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவொன்றை இட்டார்.அதில் குறிப்பிடப்பட்டதாவது,



ஏப்ரல் நான்கு முதல் ஆறு வரையான திகதிகளில் இலங்கைக்கான இருநாள் விஜயமொன்றை மேற்கொள்கிறேன். கடந்த டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க மேற்கொண்டிருந்த மிகவும் வெற்றிகரமான விஜயத்தைத் தொடர்ந்து இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது. ‘பகிரப்பட்ட எதிர்காலம் ஒன்றுக்கான பங்குடைமைகளை வலுவாக்கல்’ என்ற கூட்டு தொலைநோக்கு குறித்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும். அதேவேளை, நமது பகிரப்பட்ட இலக்குகளை உணர்ந்து கொள்வதற்கு மேலதிக வழிகாட்டல்களையும் இவ்விஜயம் வழங்குகின்றது.



கடந்த கால அடித்தளங்ளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ்விஜயங்கள், நமது மக்களின் நலன்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலன்களுக்காக நமது நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குமென நான் நம்புகின்றேன்.





போக்குவரத்து ஏற்பாடு





இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.



இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.



அதன்படி, இன்று ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்புகட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் மூடப்படவுள்ளன.



இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



மேலும், நாளை 05 ஆம் திகதி, கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திரசதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லை அபேகம வளாக வீதிகள் மூடப்படவுள்ளன.



இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்துக்கு அனைத்து வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது.



விசேட பாதுகாப்பு



மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் செயற்படுத்தப்பட வுள்ளது.



இன்று வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 06ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் எனப் பலரும் வரவுள்ளனர்.



மேல் மாகாண மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்ன, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளைக் கண்காணிக்க உள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிரதமர் மோடியும் அவரது குழுவினரும் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கும்போதும் கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் பயணிக்கும் போதும் பல வீதிகள் அவ்வப்போது மூடப்படும்.



கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்காக அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்புப் படையினர் பயன்படுத்தப்பட வுள்ளனர்.



அரசு அறிக்கை



இதேவேளை, இந்தியப் பிரதமரின் விஜயம் தொடர்பில் நேற்று மாலை அரசாங்கம் அறிவிப்பொன்றை விடுத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வரவுள்ளார்.



இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.



இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை 05 ஆம் திகதி காலை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.



இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.



இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரியமின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெற்றிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.



அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவஅநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »