நுவரெலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி (01) ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறையை கழிப்பதற்காகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரி செய்வதற்கும், மட்டக்குதிரையில் சவாரி செய்வதற்கும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் அதிக பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பூங்கா அலங்காரங்களையும், இயற்கை அழகை ரசித்து வருகின்றனர் .
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி, நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா இயற்கை அழகினால் நிரம்பியிருக்கும் காரணமாக அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் மேலும் இயற்கையுடன் கூடிய ஒரு பயணம் வேண்டும் என்றால் எந்தவிதமான தயக்கமும் இன்றி நுவரெலியாவை தெரிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்