Our Feeds


Wednesday, April 2, 2025

Sri Lanka

ஈரானுக்கு எதிராக குவிக்கப்பட்ட 50 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் - ஏவுகணைகளை தயார் செய்தது ஈரான்.



ஈரானைச் சுற்றியுள்ள  10 இராணுவத் தளங்களில் ஜம்பதாயிரம் இராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அமெரிக்கா ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது.


அதுமட்டுமின்றி ஈரானை தாக்கும் வகையில் B 2 Bombers என்ற போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா எனும் பவளத்தீவில் உள்ள இராணுவத் தளத்தில் அமெரிக்கா ராணுவத்தை குவித்துள்ளது. 


இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகளைத் தயார் நிலையில் திருப்பி வைத்துள்ளது.


ஈரானைச் சுற்றிய 10 இராணுவத் தளங்களில் அமெரிக்கா படை வீரர்களை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உடனான அணுசக்தி திட்டத்துக்கு ஈரானை பணிய வைக்கும் இந்த நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக ஈரான் இராணுவத்தின் விமானப்படை பிரிவின் தளபதி கூறுகையில்,


‛‛அமெரிக்கா 10 இராணுவத் தளங்களை இந்த பிராந்தியத்தில் வைத்துள்ளது. குறிப்பாக ஈரானைச் சுற்றி அந்த தளங்கள் உள்ளன. அங்கு 50 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறிவது போன்றதாகும். இது அமெரிக்காவுக்கு தான் பிரச்சனையாகும்'' என்று எச்சரித்துள்ளார்.


இதனால் நாளுக்கு நாள் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் - காஸா போர், அமெரிக்கா - ஏமன் நாட்டின் ஹவுதிகள் இடையேயான மோதல் உள்ளிட்டவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த நடவடிக்கைகள் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »