Our Feeds


Monday, April 7, 2025

Zameera

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது




 முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள  ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கண்டியில் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதாள உலகக்குழுவின் குற்றச் செயல்கள் மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்பன நாட்டில் வெகுகாலமாக இடம்பெறும் நிகழ்வுகளாக உள்ளன. நாம் இவ்வாறான குற்றச்செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவ்வாறே போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாதாள உலகக்குழுக்களை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்கு பல அரசியல் தலைமைகள் முயற்சித்துள்ளன. இது யாரும் அறியாத இரகசியம் அல்ல.

நாட்டில் இத்தகையோரை நிலைநிறுத்தி குற்றச்செயல்களின் மூலம் வெகுகாலமாக ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். ஆகையால் இத்தகைய செயற்பாடுகளை நான்கு மாதங்களில் இல்லாமல் ஒழிப்பதென்பது முடியாத காரியம். எனினும் நிச்சயமாக பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பொதுமக்களுக்கு அச்சமின்றி, சந்தேகமற்ற வகையில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

பாதாள உலகக்குழுவை ஒழிப்பதற்கான விசேட திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், ஆயுதங்களும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வாறே பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

தற்போது இவ்வாறு மூப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 500 பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் கலைந்து செல்ல உள்ளனர். அவர்களையும் மேற்படி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள  ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,  அதற்கமைய ஒரு சிலர்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக்குழுவை ஒழிக்கும் நடவடிக்கை முப்படையில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »