தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டுவரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அன்று போலவே இன்றும் எமது ஆதரவை வழங்குவோம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும். கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி தான் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. அன்று அரசியலமைப்பு பேரவையில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே வாக்களித்தது. அரசியலமைப்பை மீறியே தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். இந்த அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதியைப் போலவே சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு பேரவையில் நடந்தவற்றை முற்றிலுமாகத் திரிவுபடுத்தி, மீயுயர் சட்டத்தை அப்பட்டமாக மீறிய வகையிலயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அன்று தேசபந்து தென்னகோனை அரசியலமைப்பை மீறி, உயரிய சட்டத்தை காலில் போட்டு மிதித்து, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட போது, இன்று கூச்சல் போடுபவர்கள் அன்று மௌனம் காத்தனர். இவ்வாறு தாமதமாகவேனும் இந்த அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பூரண ஆதரவை வழங்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 பாதுகாப்பு பிரதியமைச்சரின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான டியுஷன் எங்கே?
தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் வகுப்புகளை நடத்த மேசையையும் கதிரையையும் கொண்டு வருமாறு பாதுகாப்பு பிரதியமைச்சர் தேர்தலின் போது குறிப்பிட்டார். ஜனவரியில் இருந்து ஏராளமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 22 க்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பிரச்சினையாக காணப்படுகிறது. பொதுமக்களின் வாழ்க்கை தேசிய பாதுகாப்போடு நேரடியாக தொடர்பு படுகின்றன. இன்று நாட்டில் சட்டம் அமுலில் இல்லை. குண்டர்களும், குற்றவாளிகளும், கொலைகாரர்களும் இன்று சமூகத்தை ஆட்கொண்டுள்ளனர். இவற்றுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.