Our Feeds


Tuesday, March 18, 2025

SHAHNI RAMEES

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே NPPயின் திட்டம் : விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

 

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எமக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களே இருக்கின்றன. அதனை அதிகரிப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்வோம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,  

"1948 ஆண்டு முதல் இதுவரை 107பேரே ஒலிம்பிக் போட்டியில் பிரதிநிதிப்படுத்தி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. இதனை நாங்கள் அதிகரிக்க வேண்டும். அதேநேரம் இதுவரை எங்களுக்கு 2 ஒலிம்பிக் பதக்கங்களே வெற்றிகொள்ள முடியுமாகி இருக்கிறது.

1948ஆம் ஆண்டு டங்கன்வைட் பதக்கம் வென்றார் அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு சுசந்திகா ஜயசிங்க பதக்கம் வென்றார். அதன் பின்னர் எங்களால் எந்தவொரு ஒலிம்பிக் பதக்கத்தையும் வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

அதேபோன்று பொதுநலவாய போட்டிகளில் இதுவரை எமக்கு 24 பதக்கங்களே வெற்றிகொள்ள முடியுமாக இருக்கிறது. ஆசிய போட்டிகளில் அனைத்து வகையான போட்டிகளிலும் 51 பதக்கங்களையே வெற்றிகொள்ள முடியுமாகி இருக்கிறது.

அத்துடன் கிரிக்கெட் போட்டியில் உலகக்கிண்ணம் மற்றும் டி 20 உலகக்கிண்ணத்தை ஒரு தடவை வெற்றிகொண்டுள்ளோம். இவையல்லாமல் தனிப்பட்ட வெற்றிகளும் இருக்கின்றன.

எனவே, ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையை நாங்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் மேற்கொள்வோம் அதற்கு தேவையான வகையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்து, அந்த மாணவர்களை தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளச்செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இந்த முறை வரவு,செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »