Our Feeds


Monday, March 24, 2025

Zameera

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் ; சாணக்கியன் M.P


 பாராளுமன்றத்தில் 21.03.2025 அன்று இடம்பெற்ற  சாணக்கியன் MP உரை.  

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சரின் உரைக்கு பின்னர் பேச கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. கௌரவ அமைச்சர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் வடக்கு, கிழக்கிலே தமிழரசு கட்சியினுடைய எந்தவொரு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படவில்லை என்பதை கௌரவ அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும். மன்னாரில் மாத்திரம் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளோம். தேசிய மக்கள் சச்தி மட்டுமல்ல தமிழரசு கட்சியும் யாழ்ப்பாணத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல நாம் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைப்போம்.

ஏனென்றால் எமது தலைவர் பிரபாகரனினுடைய பெயரை உச்சரிக்கும் அளவுக்கு வந்துள்ளீர்கள் என்பதற்கு வாழ்த்துகின்றோம்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது பெயரையும், ஊரையும் கூறுகின்றமைக்கு வாழ்த்துக்குரிய விடயமாகும். வட மாகாணத்திற்கான உங்களது செயற்பாடு வெறும் வாயளவிலானது மாத்திரமே தவிர, இந்த ஆறு மாத காலப்பகுதியில் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை கூறவேண்டும். மிக முக்கியமாக எமது வட மாகாணத்திற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதும் இல்லை.

மக்கள் உணர்;ந்துவிட்டார்கள். பட்டலந்த ஆணைக்குழு பற்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நீங்கள் பரணகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி. அறிக்கை, உடலகம ஆணைக்குழு இவற்றில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு தகுதியற்றவர்கள், இன்று சபையைவிட்டு ஓடிச் செல்கின்றனர்.

நிதி அமைச்சினுடைய விவாதத்தில் ஓரிரு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த விரும்புகிறேன். வரி நிவாரணம், வரி அறவீடு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இந்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது நான் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்தேன்.

சிகரெட் கம்பனிகளுக்கு மாத்திரம் 56 வீத வரி அறவிடப்படுகிறது. ஏனைய உற்பத்திகளுக்கு 90 அல்லது 100 வீத வரி அறவிடப்பட்டுள்ளது. ஏன் சிகரெட் கம்பனிகளிடமிருந்து வரி அறவிடப்படுவதில்லை என கேள்வி எழுப்பியிருந்தோம்.

பதில் இல்லை. கடந்த காலங்களில் இந்த சிகரெட் கம்பனிகளிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு வரி அதிகரிக்கப்படாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்படியென்றால் இந்த அரசாங்கத்திலும் அவ்வாறுதான் நிகழ்கின்றதா என்பது தெரியவில்லை. கடந்த அரசாங்கத்தில் பாரியளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 964 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த அரசாங்கத்தில் சாதாரண மக்களிடம் வரி அறவிடாது 964 பில்லியன் ரூபாயை மீளப் பெறுவதற்கு ஏதேனும் வழி உண்டா? எதுவும் இல்லை. மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகியவற்றில் அறவிடப்படாத கடன்கள் உள்ளன. அவை அறவிடப்படுகின்றனவா என வினவினோம். அதற்கும் எவ்வித பதிலும் இல்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கும் இந்த அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்படுகிறது.

தற்போது இவர்கள் 7 வீதம் என்ற சிறு வட்டி தொகைக்கே தங்களது நடைமுறைக் கணக்குகளை பராமரித்து வருகின்றனர். இந்த வட்டி வீதத்தை முன்னர் இருந்தது போன்று 15 வீதத்திற்கு ஏனும் அதிகரிக்குமாறு நாம் கோரினோம். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எமது இந்த கருத்துக்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் சேரு பூசும் குழுவினர் எமக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பர்.

ஏற்கனவே வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிபத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவிக்கப்பட்டது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் இலஞ்சமாக வழங்கப்பட்ட 172 மதுபானசாலை அனுமதிபத்திரங்களில் 150 தற்போதும் செயற்பாட்டில் உள்ளன. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. நிதி அமைச்சினாலேயே இவை பெற்றுக் கொடுக்கப்பட்டன. இவை அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டவையாகவே கூறப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்ட 10 ஆயிரம் பேர் இருந்தாலேயே மதுபானசாலை அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட முடியும்.

கிளிநொச்சியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையே 94 ஆயிரம் தான். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 17 மதுபானசாலை அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் 5 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மதுபான உற்பத்தியில் ஈடுபடும் மெண்டிஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுபானசாலை அனுமதி வழங்க முடியாது என சட்டம் தெரிவிக்கிறது.

இதேவேளை த ஃபினான்ஸ் நிறுவனம் தொடர்பிலும் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. த ஃபினான்ஸ் நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட 6400 பேரின் பணம் இதுவரை மீளப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் முன்னெடுக்கவில்லை. இந்த பாராளுமன்றத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றேன். அவ்வாறு எவரும் இருந்தால் விசாரணை நடத்தி அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதாக கூறப்பட்டது. எனவே இவ்வாறான அரசாங்கத்திடம் எனக்கு சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது மூன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜயகொடி என்பவர் கொள்முதல் முகாமையாளராகவும், மல்லிகாராச்சி என்பவருக்கு மனிவள முகாமையாளர் பதவியும், தொழில்நுட்ப முகாமையாளராக திசாநாயக்க என்பவரும் நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டளவில் இந்த மனிவள முகாமையாளருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012 இற்கும் 2013இற்கும் இடையே உரக் கூட்டுத்தாபனத்தினுள் பாதை ஒன்றை அமைப்பதற்கு 40 மில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தத்திற்கு டென்டர் (ஏலக்குத்தகை) விடப்பட்டது.

கொள்முதல் முகாமையாளர் இந்த ஒப்பந்தத்தை சரிவர முன்னெடுக்காது ஓடி சென்றுள்ளார். அதனை தற்போது ஜயகொடி என்ற அமைச்சர் ஒருவரும் இருக்கின்றார். அவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் இராஜினாமா செய்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய ஜயகொடி என்ற அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். நீங்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா, இல்லையா. ஏற்றுக்கொள்ளாவிடின் அதற்க காரணத்தை தெரிவியுங்கள்.

இல்லையென்றால் அந்த நபரை இராஜினாமா செய்ய சொல்லுங்கள். ஏனெனில் ஜே.வி.பி என்பது திருட்டு சம்பவங்களுக்கு புதிதானவர்கள் அல்ல. நீங்கள் செய்த திருட்டு சம்பவங்கள் இந்த தர்மன் வி;க்ரமரத்ன என்பவரின் புத்தகத்தில் உள்ளது. கண்டி திகன வங்கியில் 60 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. மொரட்டுவவில் 60 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள். மொரட்டுவ கட்டுபெத்த இலங்கை வங்கியில் 82 இலட்சம் பணம். வெள்ளவத்தை மக்கள் வங்கியில் 222 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள்.

இவை அனைத்தும் 1989 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றவை. எனவே ஒழுக்கம் குறித்து பேசுகின்ற இலஞ்ச ஊழலை தடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் இந்த விடயங்களுக்கு பதில் கிடைக்குமா? இந்த திருட்டு சம்பவங்கள் நிறுத்தப்படுமா? எதுவும் நடைபெறாது. எனவே இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »