Our Feeds


Sunday, March 16, 2025

SHAHNI RAMEES

அர்ச்சுனா MP யூ-டியூப் ஊடாக பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்த இடமளிக்காதீர்கள்! - மரிக்கார் எம்.பி. கோரிக்கை


ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது  பிரபல்யத்துக்காக  பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு  பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சபையில் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15)   நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,




பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  இஸ்லாமிய மதத்தை பற்றி குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த   தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். 


எவரும் தமது  பிரபல்யத்துக்காக பிற மதங்களை பற்றி இவ்வாறு பேசியதில்லை. தமது உரிமைகள் மற்றும் தமது மக்களுக்காக பேசினார்கள், பேசுகிறார்கள்.


ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட  காணொளிகளை பதிவிடுவதற்கு  பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 


12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகள் எங்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா, தேசவழமை சட்டம் தொடர்பில் நாங்கள் பேசுவதில்லை. ஆகவே  மதங்கள் தொடர்பில்  விமர்சனங்களை முன்வைக்கும் போது அதனை சாட்சிகள் ஊடாக அவர் நிரூபிக்க வேண்டும்.


முஸ்லிம் பெண்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதாகவும் அர்ச்சுனா குறிப்பிடுகிறார். இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு கௌரவமான உயரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தெரியாத விடயங்களை பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்ள  வேண்டும்.


பாராளுமன்ற அர்ச்சுனாவுக்கு  டிக்டொக், யூ-டியூப் ஊடாக டொலர் உழைக்க வேண்டுமாயின் அதற்கு பல வழிகள் உண்டு. சுற்றுலாத்துறை அமைச்சில்  ஏதேனும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டு யூ-டியூப்  காணொளிகளை   பதிவிடலாம். அவருக்கு அனுமதி வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். 


இதனை விடுத்து பாராளுமன்றத்துக்கு வந்து மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்க வேண்டாம். மக்கள் விடுதலை எந்த மதத்தையும் மதிப்பதில்லை. 


ஆகவே, அர்ச்சுனா எவரின் தைரியத்தில் பேசுகிறார் என்பது தெரியவில்லை. மதத்தின் அடிப்படை கோட்பாட்டை  மாற்றியமைக்கும் உரிமை அரசியல்வாதிகளுக்கு கிடையாது.  


ஆகவே, பாராளுமன்றத்தில் அநாவசியமாக செயற்படுபவர்களுக்கு உரையாற்ற அனுமதி வழங்க வேண்டாம் என்று   கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »