Our Feeds


Thursday, March 13, 2025

SHAHNI RAMEES

ஒரு ஆசனம் கூட இல்லாமலும் ஜனாதிபதியாகலாம்! - ஆதரவாளர்களை Motivation பண்ணிய வஜிர

 

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம் என ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

புதன்கிழமை (12) ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலவந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிந்தளவு முயற்சித்தார். இணக்கப்பாடு எட்டப்பட்டு யானை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

அடுத்த தெரிவு ஏதேனுமொரு உள்ளுராட்சி மன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியாகவோ, ஐக்கிய மக்கள் சக்தியாகவோ அன்றி சுயாதீன சின்னமொன்றில் போட்டியிடுவதாகும். 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கு அந்த தடையும் இல்லை என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் ஐ.தே.க. பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட போது நாம் அழிந்து விட்டதாக சிலர் எண்ணினர். ஆனால் அந்த ஒரு ஆசனமே இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்தது. எனவே தற்போது ஒரு ஆசனம் கூட இல்லை என நாம் சோர்வடைந்து விடக் கூடாது.

ஒரு ஆசனம் கூட இல்லாமலும் ஜனாதிபதியாகலாம். ஐ.தே.க. பலம் மிக்கது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மேற்குறிப்பிட்ட 3 யோசனைகளுக்கும் இணக்கம் தெரிவிக்கப்படாவிட்டால் இறுதியாக யானை சின்னத்தில் நாம் களமிறங்குவோம். அதிலும் எமக்கு இலாபமுள்ளது.

77 ஆண்டுகள் சாபம் என தற்போதைய அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது. அந்த சாபத்தில் தான் உப்பு பக்கற் ஒன்றின் விலை 110 ரூபாவாகவும், தேங்காயின் விலை 80 ரூபாவாகவும் காணப்பட்டது. 77 ஆண்டு கால ஆட்சிக்கும் 77 நாட்கள் ஆட்சிக்குமுள்ள வித்தியாசத்தை தற்போது மக்களால் உணரக் கூடியதாக இருக்கும் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »