Our Feeds


Saturday, March 15, 2025

SHAHNI RAMEES

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக செல்வோர் கவனத்திற்கு.....

 


வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின்

ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.




வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் (12) நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே கௌரவ அமைச்சர் விஜத ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.




இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும், எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.




ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார்.




சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.




இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »