Our Feeds


Friday, March 21, 2025

Zameera

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


 கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (21) இடம்பெற்ற நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் மீதான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளரே, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர், பிரதி அமைச்சர், வடமாகாண ஓய்வூதியர் உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் அமைப்பு தங்களுக்குள்ள குறைகளை இப்படித் தெரிவிக்கின்றார்கள் என்பதை ஓய்வூதியர்களின் நலன் கருதி தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020-01-01இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்தில் வழக்கு தாக்கல் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழில் சங்கங்கள் தேசியமக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என நம்பிக்கையூட்டி வந்துள்ளனர்.


இந் நிலையில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் இதற்கு தீர்வுகிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

அதாவது 2020ஆம் கிடைக்கவேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுவரை, ஐந்தாண்டுகளாக பெறமுடியாது காத்திருந்தவர்களுக்கு தற்போது வரவு செலவுத்திட்டத்தில் அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027 வரை வழங்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளளது.


இக்கொடுப்பனவு பெறவேண்டிய 2000 பேரளவிலான ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர். இந்நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக்காலம் பற்றி சிந்திக்காது, குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போட்டுள்ளதென கவலையடைகின்றனர்.


அமைச்சர், பிரதி சபாநாயகர் மக்களுக்கான அரச பணியில் தங்களுடைய கரிசனையைப் பண்பாக செய்து, இன்று ஓய்விலிருக்கும் சேவையாளர்களை நிம்மதியாக ஓய்வுக் காலத்தை கழிப்பதற்கு உதவி செய்யுங்கள். அந்தக் கொடுப்பனவுகளை கூடிய விரைவில் உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

 

விஜயரத்தினம் சரவணன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »