Our Feeds


Friday, March 28, 2025

SHAHNI RAMEES

கட்டளை பிறப்பித்த பொன்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ? - விமல் வீரவன்ச

 


விடுதலை புலிகள் அமைப்பை முப்படையினர்

இல்லாதொழித்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்குக்கு தைரியமாக செல்கிறார்கள். பிரித்தானியாவின் தடையை வன்மையாக கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


யுத்தக் காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா,  வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.


அதேபோல் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யுத்தக் காலத்தில் இராணுவ தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார்.


அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோர் பதவி நிலை  அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள். அவ்வாறாயின் ஏன்  சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே தடுத்தார்.


1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனித படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளை கொன்று,தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பெரிய பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பிக்கிறது.


விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள்.இவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்த தடையை விதித்துள்ளது.விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்றும் நாட்டில் உள்ளார்கள்.


பிரித்தானியாவில் தற்போதைய முறையற்ற செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் நாட்டில் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தரப்பினர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். நினைவேந்தல் பகிரங்கமாக அனுஸ்டிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.


சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்குக்கு தைரியமாக செல்கிறார்கள், அரசியல் செய்கிறார்கள்.


பிரித்தானியாவின் தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அறிவிப்பு அதிருப்திக்குரியன.  குறித்த தடையை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிடும் தற்றுணிபு அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »