மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தவறியமைக்கு வருந்துவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட திட்டம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்ததன் பின்னணி என்ன என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலைமை எதிர்காலத்தில் பாரிய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தடையாக அமையும் எனத் தெரிவித்த அவர், அது தொடர்பில் தமது கவலையையும் தெரிவித்தார்.
தமது அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளை தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டு ஆசியாவை நோக்கிய உலகளாவிய அதிகாரமாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கை அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்க வேண்டும் என்றார்.