இதன் போது பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இக்கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுசியா சிவராஜா, போசகர்களான சிவராஜா, ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,
அரசாங்கம் மாற்றமடைந்து 8 மாதங்கள் ஆன போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்த 1350 ரூபாய் சம்பளம் தான் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்திற்கு ஜே.வி.பி. யிடம் ஆதரவு கோரியபோது, ஜே.வி.பி. ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்தது.
அன்று அவர்கள் ஆதரவு வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் அது 1700 ரூபாய் சம்பள உயர்வை பெற உறுதுணையாக அமைந்திருக்கும். தற்போது அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஆட்சி அமைத்தது 8 மாத காலப்பகுதியில் மலையகத்திற்கு எந்த ஒரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படாத நிலையில், இந்திய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்த வீட்டுத்திட்டத்தை தான், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறதே தவிர, மேலதிகமான வீடுகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரையும் இல்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலையக மக்களுடைய பாதுகாப்பையும் அவர்களுடைய வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கும் தார்மீக பொறுப்பு இ.தொ.காவிற்கு உண்டு.
மேலும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் போல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்திற்கு என்ன செய்தது என்று கேட்கின்றனர்.
இ.தொ.கா தலைவர் என்ற வகையில் அதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இ.தொ.கா பெற்றுக் கொடுத்த பிரஜாவுரிமையில் தான் இன்று ஒவ்வொருவரும் வாக்களித்து வருகின்றனர்.
இ.தொ.கா நிர்மாணித்த பாடசாலை, வழங்கிய ஆசிரியர் நியமனத்தில் தான் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் கல்வி கற்கின்றனர்.
இ.தொ.கா நிர்மாணித்து கொடுத்த வைத்தியசாலையில் தான் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். இ.தொ.கா நிர்மாணித்த பாதையில் தான் பயணிக்கிறார்கள், இ.தொ.கா பெற்றுக்கொடுத்த தபால்காரர் நியமனத்தின் ஊடாக தான் கடிதங்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இ.தொ.கா பெற்றுக்கொடுத்த மின்சாரம் மூலம் மின்வசதியுடன் வாழ்கிறார்கள். இவ்வாறு வீடு, உட்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை இ.தொ.கா பூர்த்தி செய்துள்ளது.
இவை அனைத்திலும் பயனடைந்து விட்டு வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் போல் பேசுவது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இ.தொ.கா நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது. சேவல் சின்னத்தில் போட்டியிடும் ஒவ்வொருவரும், தாங்கள் பிரதேச சபை உறுப்பினர் ஆக வேண்டும், பிரதேச சபை உப தலைவர், தலைவர் ஆக வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.