Our Feeds


Tuesday, March 18, 2025

SHAHNI RAMEES

மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் மீள திறக்கப்பட வேண்டும்! - இல்லை புதிய காணி வழங்குங்கள். - முஜிபுர் ரஹ்மான்

 

மஹர சிறைச்சாலையில் மூடப்பட்டிருக்கும் பள்ளிவாசலை அந்த பிரதேச மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவற்கோ அல்லது அந்த பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான காணி ஒன்றை வழங்வதற்கோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மகர சிறைச்சாலையில் 122 வருடங்கள் பழைமைவாய்ந்த முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று இருந்து வருகிறது. பிரித்தானிய காலனித்துவவாதிகளால் இந்த சிறைச்சாலையை அமைக்கும்போது சிறைச்சாலை வளாகத்துக்குள்ளே இந்த முஸ்விம் பள்ளிவாசலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அந்த பிரதேச மக்கள் தங்களின் மத நடவடிக்கைகளுக்கு இந்த பள்ளிசாலை பயன்படுத்தி வந்தார்கள். என்றாலும் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து, பாதுகாப்பு காரணம் கருத்தி இந்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. 

கடந்த கோட்டாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இதுதொடர்பில் நாங்கள் அவர்களிடம் தெரிவித்த போது, பாதுகாப்பு காரணமாக இதனை வழங்க முடியாது, இதற்கு மாற்றீடாக அந்த பிரதேச மக்களின் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு காணி துண்டு ஒன்றை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்கள்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவே இந்த சபையில் அதனை தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அது இடம்பெறவில்லை. அதனால் அந்த பிரதேச மக்கள் தங்களின் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படடு வருகின்றனர். 

அதனால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி, அந்த மக்கள் மகர சிறைச்சாலையில் இருக்கும் பள்ளிசாலை தொடர்ந்து பயன்படுத்துவற்கோ அல்லது அந்த பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான காணி ஒன்றை வழங்கோ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »