Our Feeds


Monday, March 17, 2025

SHAHNI RAMEES

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன! - சம்பிக்க குற்றச்சாட்டு

 

பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில்  ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

இந்த முரண்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழு வரை தொடர்கிறது. இதனால் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது. நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என்று ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்கள் கருதுகின்றனர்.

தமக்கு இணக்கமானவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கும் அளவுக்கு பொலிஸ் சேவை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை மாத்திரமல்ல, பாதுகாப்பு சேவை உட்பட புலனாய்வு பிரிவும் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கு பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர். 

இது உலக நகைச்சுவையாகும். தேசபந்து தென்னகோனை பொலிஸார் கைது செய்யமாட்டர்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெற்றுக்கொள்வதற்கு தேசபந்துக்கு சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதுவரையில் அவர் கைது செய்யப்படமாட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் பென்சில் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »