Our Feeds


Tuesday, March 18, 2025

SHAHNI RAMEES

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை வழங்க அரசாங்கம் விரும்புகிறதா ? - ஹேசா விதானகே கேள்வி

 

கிரிக்கெட் சபையின் மோசடிகளை மூடி மறைப்பதற்கு  தேசபந்து தென்னகோனுக்கு  நிதி,எரிபொருள்,மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்ற அடிப்படையில் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பிலும் முறையான  விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். சம்மி   சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை வழங்க அரசாங்கம் விரும்புகிறதா என ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம்,  விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு   அவர் மேலும் உரையாற்றியதாவது,

முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க முடியும் என்று பிரதமர் குறிப்பிடுவதை  ஏற்றுக்கொள்கிறேன். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கினார். 

ஆனால் அலுவலங்களில் அவர்கள் அமர்வதற்கு கூட கதிரைகள் கிடைக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் கால நிலைமை தான் தற்போதும் தொடர்கிறது என்று பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில்  பாரிய சர்ச்சை காணப்படுகின்ற நிலையில் இந்த மாதம் 31 ஆம் திகதி கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு தெரிவு இடம்பெறவுள்ளது.  

பல மோசடி குற்றச்சாட்:டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்மி  சில்வாவை  மீண்டும் தலைவர் பதவிக்கு தெரிவு  செய்வதற்கான  சாத்தியம் அதிகளவில்  காணப்படுகிறது.

2023 ஆண்டு     கிரிக்கெட் சபையின்  ஊழல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது.  

இதன்போது  விளையாட்டுத்துறை  சட்டம் மற்றும்  கிரிக்கெட் சபையின் சேவை பிரமாணக் குறிப்பு  திருத்தம் செய்யப்பட   வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கிரிக்கெட்  சபையின்  மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு  கடந்த அரசாங்கத்தில்  அப்போதைய அமைச்சர்  அலி  சப்ரி  தலைமையில் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது  இந்த குழுவின் அறிக்கைக்கு என்ன நேர்ந்தது.

முன்னாள் நீதியரசர் சித்ரசிறி தலைமையிலான குழு தயாரித்த  அறிக்கை ஏன்  பாராளுமன்றத்துக்கு இதுவரையில்  சமர்ப்பிக்கவில்லை. இம்முறையும் சம்மி சில்வாவை தலைவராக தெரிவு செய்து விட்டதன் பின்னரே அரசாங்கம் இந்த அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்  என்று தோன்றுகிறது.

பொலிஸ்மா   அதிபர் தேசபந்து தென்னகோனை  தேடி பொலிஸார் நாட்டை வலம் வருகின்றனர்.  கிரிக்கெட்  சபையில்  நிதி மற்றும் உபகரண செலுத்தல் பட்டியலில்  தேசபந்துவின் பெயர் உள்ளது. 

இவருக்கு மாதம்  150000 ரூபாய். லீற்றர் பெற்றோல், மடிக்கணினியும், தொலைபேசியும் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சபையின் மோசடிகளை மூடி மறைப்பதற்கு இவ்வாறு  இலஞ்சம்   வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடும் தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »