Our Feeds


Thursday, March 27, 2025

SHAHNI RAMEES

தேசபந்துவுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுத்தது நாங்கள் தான்....! - சஜித்

 



தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது

தொடர்பிலான பிரேரணையொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட போதிலும், முதலில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே நடவடிக்கை எடுத்தது. கடந்த அரசாங்க காலப்பிரிவில் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும் அரசியலமைப்பை மீறி, அரசியலமைப்பு பேரவையின் பணிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி தேசபந்து தென்னகோனை நியமிக்க முற்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை எதிர்த்தது.

அப்போது நானும் கபீர் ஹாசிமும் அவருக்கு எதிராக வாக்களித்தோம். இப்போது அவரை எதிர்க்கும் ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மௌனம் காத்து வந்தனர். தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பை மீறியமைக்கு முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த கொள்கையை இன்றைய அரசாங்கம் கடைபிடிப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா?

தோட்ட மக்களை லயன் அறையிலிருந்து விடுவித்து, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களை வலுவூட்டுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக கூறி வந்தது.

வேலையற்ற இளைஞர்கள் மற்றும் லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு பயிரிடப்படாத காணிகளை வழங்கி, சொந்தக் காலில் நிற்கத்தேவையான திட்டங்களை நாம் வகுத்திருந்தோம்.

 தற்போதைய ஆளுந்தரப்பினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? தேர்தல் காலங்களில் வெறும் ஏமாற்று கோஷங்களையே மலையக மக்களுக்காக எழுப்பினர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


உர மானியம் எங்கே?

விவசாயிகளுக்கு உர மானியம் கிடைக்காமை, உருளைக்கிழங்கு, மரக்கறி விவசாயிகளுக்கும் உர மானியம் கிடைக்காமை போன்ற பல பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.


மேலோட்டமாக பார்ப்பதை விடுத்து யதார்த்தத்தில் நோக்கி காய் கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நாளாந்த ஜீவனோபாயத்தை அவர்களுக்கு தங்கு தடையின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபுறம் பொருட்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளன. இவற்றுக்கு முகம் கொடுக்க இவர்களுக்கு நேர்ந்துள்ளது. எனவே அரசாங்கம் இவர்களினது நலன்கள் குறித்து சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்  என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


புலம்பாதீர்கள்!

குரங்குகள் தேங்காய் சாப்பிட்டன, நாய்க்கு சோறு போடுவதால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றவாறு அரசாங்கம் புலம்பிக்கொண்டும், சிணுங்குவதன் மூலமும் இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது.


மக்கள் ஆணையை வழங்கியது சிணுங்குவதற்கும் புலம்புவதற்குமல்ல. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குமாறே ஆணையைப் பெற்றுத் தந்தனர். ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இன்று சட்டம், ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகியுள்ளன.


இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை பேணும் விடயத்தில் அரசாங்கம் தவறிழைத்து விட்டது. சமூகம் கொலைகாரர்களின் பிடியில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு பிரதியமைச்சர் தேசிய பாதுகாப்பு குறித்து டியூஷன் கொடுப்பதாகப் பேசினாலும், இன்றளவிலும்  இந்தக் கொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர்களால் முடியவில்லை. தேசிய பாதுகாப்பும் பொது மக்கள் பாதுகாப்பும் இரண்டுமே ஆபத்தில் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »