Our Feeds


Tuesday, March 18, 2025

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல்கள் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் - அமைச்சர்

 



பேராயர் மெல்கம் கர்தினாலுடைய ஆதங்கம் நியாயமானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில்  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செவ்வாய்க்கிழமை (18)  ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை. 


அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.


அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்த வகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராரயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகிறது.


எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.


கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம். 


எனவே மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »