முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி
அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு.
இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும்.
நான் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நம்புகின்றேன் என தெரிவிக்கவில்லை ஆனால் அந்த இளைஞர் அவ்வாறு செயற்பட்டிருந்தால் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கவேண்டும்.
வெறுப்பு பேச்சுக்காக மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்யவேண்டும்.
வெறுப்பு பேச்சு என்பது தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நாங்கள் கேள்விப்படாத விடயம் இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
அவ்வாறான வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம்.
ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம்,அது எவ்;வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்கின்றோம்.