Our Feeds


Sunday, March 23, 2025

Zameera

நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க உதவ தயாராக இருக்கின்றார்


நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வேலைத்திட்டங்களிலிருந்து வெளியேறுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (22)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடளாவிய ரீதியில் யானை சின்னத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது. நாடு வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியே அதனை மீட்டெடுத்திருக்கின்றது.

அதற்கமைய இனிவரும் காலங்களிலும் நாட்டுக்காக ஐக்கிய தேசிய கட்சி அதன் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

1994ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவரானதிலிருந்தே ரணில் விக்கிரமசிங்க இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். எனவே தற்போது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவ்வாறானவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமூகத்தில் எந்தவொரு சமூகத்தினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே முதலில் இந்த அறிக்கையை முழுமையாக வாசிக்குமாறு சகலரையும் வலியுறுத்துகின்றோம். அவ்வாறு அதனை முழுமையாக வாசிப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வேலைத்திட்டங்களிலிருந்து வெளியேறுவர்.

இம்முறை தேர்தலில் அரசாங்கத்தை விடுத்து ஏனைய கட்சிகளுக்கே மக்கள் வாக்களிப்பர். நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார். எனவே இளம் தலைமுறையினர் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதற்கமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.


 (எம்.மனோசித்ரா)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »