தேசிய பாதுகாப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தடையாகவே செயற்படுகிறார்கள். நவீன பொருளாதாரத்தின் உச்ச பயனைப் பெற வேண்டுமாயின், அரச நிர்வாக கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயமாக்களுக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:
அரச நிர்வாக கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளார். துறைசார் தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை அமுல்படுத்துவதற்கு பல ஆண்டுகாலமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நான் இளைஞராக இருந்தபோது பெற்றுக்கொண்ட அடையாள அட்டையைத் தான் தற்போதும் பயன்படுத்துகிறேன். நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு அமைய போலியான அட்டைகளை எவரும் உருவாக்கலாம். ஆகவே, நவீன நடப்புகளுக்கு அமைய இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் துரிதகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரச நிர்வாக கட்டமைப்பை தனியார் தரப்பின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் மயப்படுத்த முயற்சிக்கும்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும். கடந்த காலங்களிலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நான் சுவசரிய அம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது என்னை இந்திய முகவர் என்று விமர்சித்தார்கள். இந்த நாட்டின் மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள்.
பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் 2015ஆம் ஆண்டு இந்தியாவின் ஒத்துழைப்புடன் சுவசரிய அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவைத் திட்டத்துக்குள் சுமார் 20 இலட்சம் பேரின் தரவுகள் உள்ளன. இருப்பினும் இதுவரையில் எவரது தரவுகளும் எந்த நாட்டுக்கும் வழங்கப்படவில்லை. எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே, டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை இனியேனும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தரவு கட்டமைப்புக்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம். எமது கொள்கைத் திட்டத்திலும் இதனையே வலியுறுத்துகிறோம். டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பான தீர்மானங்களை சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.