Our Feeds


Sunday, March 30, 2025

SHAHNI RAMEES

எமக்கு நாட்டு மக்களுடன் மாத்திரமே டீல்.... - ஜனாதிபதி

 


நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்

என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டி வருகிறோம். எமக்கு நாட்டு மக்களுடன் மாத்திரமே தொடர்பு உள்ளது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் மீண்டும் தவற விட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


இந்த நாட்டை கட்டியெழுப்ப அவசியமான பொறிமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும். நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெற்று தர வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் 'வெற்றி நமதே- ஊர் எமதே' வெற்றிகரமான மக்கள் பேரணித்தொடர் நேற்று சனிக்கிழமை (29)  பெலியத்த பிரதேச சபை மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,


அரசியலிலும் பொருளாதாரத்திலும் திருப்பத்தை ஏற்படுத்த நாட்டு மக்கள் புதிய அரசாங்கம் ஒன்றை தோற்றுவித்தனர். ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு சிறு குழுக்கள் விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறது. 


ஆனால் அந்த தரப்பினர் இங்குள்ள கிராமங்களுக்கு வருகை தருகின்றனரா? இல்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள்? தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து கொண்டு உரையாற்றி கொண்டிருக்கிறார்கள். விவசாய அமைப்புகளின் தலைவர்களும் அதில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் விவசாய நிலங்களில் இறங்குவதில்லை. 


அரசியல்வாதிகள் தமது வாழ்நாளில் இவ்வாறான மோசமாக தோல்வியை சந்திப்பார்கள் என சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தற்போது வேதனையாகவும் கோபமாகவும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. 


அவர்கள் தொலைக்காட்சியில் இந்தளவு புலம்புகிறார்கள் என்றால் வீட்டில் தனிமையில் இருக்கும் போது அவர்களது நிலைமை எவ்வாறு இருக்கும் என நான் நினைத்துபார்த்தது உண்டு. ஆனால் அரசாங்கம் என்பது என்னவென பிரஜைகளுக்கு இந்நாட்டில் நாம் முன்னுதாரணம் காட்டி வருகிறோம்.எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் மீண்டும் தவற விட மாட்டார்கள்.


நாம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டு வருகிறோம்.இதற்கு முன்னர் எமது நாட்டின் அரசியலில் என்ன நடந்துள்ளது.ஊழல் மோசடி நிறைந்ததாகவே காணப்பட்டது.ஆனால் பல சப்தங்களுக்கு பின்னர் இந்த நாட்டில் ஊழல் மோசடி இல்லாத மக்கள் சார்பான  அரசாங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 


நாம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என எம்மால் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக கூற முடியும். பிழையான பாதையில் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை எம்மால் சரியான பாதையில் உறுதியாக முன்னோக்கி கொண்டு  செல்ல முடிந்துள்ளது.


பொருளாதாரத்தில் பல விடயங்களில் எம்மால் உறுதித் தன்மையை பேண முடிந்துள்ளது. ஆனால் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இருந்தது என்பதை  சிந்தித்து பாருங்கள்.எனினும் நாம்  நாடு வங்குரோத்து நிலையில் இருந்து  ஸ்திரமான பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 


நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்கள் மீண்டும் அரசாங்கத்தை ஸ்தாபிக்க போவதாகக் கூறுகிறார்கள்.அவர்களுக்கு கனவு காண முடியும். ஆனால் அவை ஒருபோதும் நடக்கப் போவதில்லை.


சிறந்த தொழில் வாண்மை மிகுந்த அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. நல்லதொரு தொழில் இயலுமை மிக்கவரை அரச சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. நாம் வினைத்திறனான அரச சேவை ஒன்றிணையே எதிர்பார்க்கிறோம். 


அரச சேவையின் சம்பளம் மிகக் குறைவான மட்டத்தில் இருந்தது.அதனால் நாம் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் நல்லதொரு அதிகரிப்பை செய்ய வேண்டும் என நினைத்தோம். அதனை செய்திருக்கிறோம்.  


தொழில் வழங்கும் கொள்கையொன்றை தயாரித்திருக்கிறோம். தற்போது உயர் மட்டத்தில் பெரிய நெருக்கடி இல்லை.வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். ஆனால் மீண்டும் கூட்டமாக அரசாங்கத்திற்கு உள்வாங்கப் போவதில்லை.


அதேபோல் நாட்டின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும் பொதுமக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் அவசியமான நிவாரணங்களை வழங்க வேண்டும்.அதன்படி நாம் வரும்போது ஒரு ஏக்கருக்கான உரத்திற்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாவை 25 ஆயிரமாக அதிகரித்தோம். 


அமைச்சரவையில் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் 15 ஆயிரம் உர நிவாரணத்தை வழங்குவதாக தீர்மானித்தோம். இதற்கு முன்னதாக வயல் விளைச்சல்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கும் நாம் உர நிவாரணத்தை வழங்குவோம். 


அஸ்வெசும வேலைத்திட்டத்திலிருந்து விடுவிக்கப்படவிருந்த எட்டு இலட்சம் குடும்பங்கள் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுத்தோம்.சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கியுள்ளோம். நாங்கள் ஓய்வூதிய தொகையை 3000 ரூபாவினால் அதிகரித்தோம். மகாபொல 5000 ரூபாய் கொடுப்பனவை 7500 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம்.


புலமைப்பரிசில் கொடுப்பனவை 6500 ரூபாவாக அதிகரித்தோம்.அதேபோல் நிலையங்களுக்குள் வசிக்கும் பிள்ளைகளுக்கு அதாவது பெற்றோர் இல்லாத வீதி பிள்ளைகளுக்கு 5000 கொடுப்பனவு வழங்கவும் 3000 ரூபாவை அவர்களின் நிலையான கணக்கில் வைப்புச் செய்யவும் நாம் தீர்மானித்திருக்கிறோம். 


மாதாந்தம் அவர்களின் நிலையான வைப்புக்காக 3000 ரூபாய் வழங்குகிறோம். அந்த அநாதை பிள்ளைகள் திருமணம் ஆகின்ற போது கொடுப்பனவை குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணம் செய்கின்ற போது அவருக்கு வீடொன்றை கட்டிக்கொள்ள 10 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொடுப்போம்.இல்லாவிட்டால் அவர்களை யார் பார்ப்பது.பாலர் பாடசாலை மாணவர்களுக்கு 60 ரூபாயாக இருந்த உணவுக் கொடுப்பனவை 100 ரூபாயாக அதிகரித்தோம்.


எனவே உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியை முறையாக முகாமைத்துவம் செய்து  அதனை பிரதேச சபைகளுக்கு வழங்க வேண்டும்.எனவே இதற்கு எமக்கு பிரதேச சபைகளினதும் நகர சபைகளினதும்  அதிகாரம் எமக்கு தேவை.அதை வேறு தரப்பினருக்கு கொடுத்து பயன் உள்ளதா? 


எனக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சருக்கோ தனிப்பட்ட இலட்சியங்கள் இல்லை. எமது அதிகார தரப்பு மக்களுடைய பணத்தில் ஒரு சதமேனும் திருட மாட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே உயர் மட்டத்தில்  மாத்திரம் ஊழல் லஞ்சத்தை நிறுத்தி  மாத்திரம் போதாது. மக்களினது பணத்தை கொள்ளையடிக்காத  பிரதேசபைகள் ஸ்தாபிக்கப் படவேண்டும். அப்போதே இந்த மாற்றத்தை தேசிய ரீதியாகவும் கிராம மட்டங்களிலும் கொண்டு செல்லலாம்.


எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி மிகவும் முக்கியமானதொரு தேர்தலாகும். நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெற்று தர வேண்டும்  எனவே அனைவரும் தயாராக இருங்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »