Our Feeds


Sunday, March 23, 2025

SHAHNI RAMEES

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது - கம்மன்பில சவால்...

 


நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும்,

நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது. தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார்.


வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.


அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது. இவ்விவகாரத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி பாராளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார்.


தேசிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. பெப்ரவரி 27ஆம் திகதி தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 17ஆம் திகதி தான் அவரது வீடு பரிசோதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோரது இல்லங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்று 20 நாட்களின் பின்னர் தேசபந்துவின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் அரங்கேற்றும் நாடகமே காணப்படுகிறது.


தேசபந்துவின் மனைவி சட்டத்தரணியாவார். பொலிஸார் தமது இல்லத்தை சோதனைக்குட்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்ததால் தான் அவர் மதுபான போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தேசபந்துவின் நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »