(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது நட்பு நாடான சீன அரசாங்கத்துடனான இராஜதந்திர பயணத்துடன் பல வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். இந்நிலையில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு வெற்றிபெறும் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகவே செயற்படுகிறோம். நாட்டின் சுயாதீனம் மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி பொதுவான வெளிவிவகார கொள்கையுடன் செயற்படுவதால் எந்தத் தரப்பினரையும் பகைத்துக் கொள்ளவில்லையெனவும் விஜித்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப்பெற வேண்டுமாயின் வெளிவிவகார கொள்கை சிறந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தினோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்கள் உட்பட நட்பு நாடுகள் பல ஒத்துழைப்பு வழங்கின. இதற்கமைவாக நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன்தொகை பெற்றுக்கொள்ளப்பட்டது. இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு வெற்றிபெறும்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு புதிய பயணத்தில் செய்வது எமது பிரதான நோக்கமாகும். சிறந்த வெளிவிவகாரக் கொள்கை இதற்கு சிறந்த அடித்தளமிட்டுள்ளது.
2024இல் மிகவும் அமைதியான ஜனநாயக ரீதியிலான தேர்தல்களை நடத்தி எவ்வாறு ஜனநாயகத்தை பலப்படுத்துவத என்ற முன்மாதிரியை உலகிற்கு காட்டியுள்ளோம். நாங்கள் தேசிய நல்லிணக்கத்தை இலக்காகக்கொண்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்தி சகல இன மக்களையும் ஒன்றிணைத்த புதிய பயணத்தை முன்னெடுக்கும் நாடாக உலக நாடுகளின் மத்தியில் உறுதிப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று வீழ்ந்த பொருளாதாரத்தை படிப்படியாக கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது நாங்கள் எமது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைய பாதுகாத்தே வெளிநாடுகளுடன் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வோம். இது எமது அடிப்படைக் கொள்கையாகும். இதனை நாங்கள் ஒருபோதும் மீறப் போவதில்லை.
நாங்கள் பொருளாதார ரீதியில் எந்தளவுக்கு வங்குரோத்து நிலையில் இருந்தாலும், உலக நாடுகளுடன் அரசியலில் ரீதியாக பின்னடைவான நிலையில்இருந்தாலும் எமது ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையான்மையை ஒருபோதும் பணயமாக வைக்கப் போவதில்லை. அதனை பாதுகாத்து எமது வெளியுறவு தொடர்புகளை முன்னெடுப்போம். அத்துடன் அவர்களுடனான புரிந்துணர்வுகள், சிறப்பான உறவுகளை பாதுகாத்து அதை முன்னெடுப்போம்.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட சகல நாடுகளுடனும் நாங்கள் மிகவும் நெருக்கமான இராஜதந்திர நட்புறவு தொடர்புகளை சிறந்த முறையில் . எல்லா நாடுகளும் நல்ல நோக்கத்துடனேயே எங்களை நோக்கி பார்க்கின்றது. நாங்கள் ஒருபக்கத்திற்கு சார்பாக வெளியுறவு கொள்கைகளை பேணப் போவதில்லை. இதற்கு முன்னர் அவ்வாறு ஒரு பக்கச் சார்பாக இருந்தமையினால் அதனால் ஏற்பட்ட பாதிப்பை சந்தித்தோம். இதனால் எமது வெளியுறவுக் கொள்ளை சகல நாடுகளுடனும் சிறந்த நட்புறவுடனேயே இருக்கும்.
நாங்கள் சகல நாடுகளுடனும் மேற்கொள்ளும் இராஜதந்திர ரீதியலான செயற்பாடுகளினால் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பல நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் எமது அண்மை நாடான இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை பேணுகின்றோம். முதலாவது இராஜதந்திர பயணத்திற்கான அழைப்பு வந்தது. பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளோம்.
எமது நட்பு நாடான சீன அரசாங்கத்துடனான இராஜதந்திர பயணத்துடன் பல வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். 15 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். இதன்மூலம் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைதுணிகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துறைமுக நகரத்திற்குள் புதிய மாநாட்டு மண்டபத்தை அமைப்பதற்காக அடிப்படை நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேலியகொட மொரட்டுவை கொட்டாவ பிரதேசங்களில் குறைந்த வருமானமுடையவர்களுக்காக 1886 வீடுகளை அமைக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதுடன்இ அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. மேலும் ஆம்பாந்தோட்டையில் சீன நிறுவனமொன்று 3.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் இங்கே முதலீடுகளை மேற்கொள்ளவும் இராஜதந்திர உறவுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜப்பான் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அடுத்த பகுதியை அபிவிருத்தி செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. அதேபோன்று உலக நாடுகள் பல எம்முடன் உறவுகளை பேணி உதவ முன்வந்துள்ளன என்றார்.