Our Feeds


Sunday, March 16, 2025

Zameera

ரணில் - சஜித் இணையும் வரை நாட்டுக்கு விடிவு இல்லை



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணையும் வரை இந்த நாட்டுக்கு விடிவு இல்லை. இவ்விரு கட்சிகளினது பிளவால் கட்சி ஆதரவாளர்களுக்கே அநீதி இழைக்கப்படுவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில்  சனிக்கிழமை (15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் சகோதர கட்சிகளாகும். இரு கட்சிகளும் ஒரே கொள்கையையும் வேலைத்திட்டங்களையும் கொண்டவையாகும். 

இரு கட்சிகளும் ஒரே பொருளாதாரக் கொள்கைகளை நம்புபவையாகும். அவ்வாறிருந்தும் இவ்விரு கட்சிகளும் தனித்து செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து களமிறங்கியிருந்தால் இன்று இவ்விருவரும் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்திருப்பர். 

இரு பாரிய தேர்தல்களின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே எமக்கு காணப்பட்டது.இந்த காயத்தை ஆற்றுவதற்கு இந்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்று நான் எண்ணுகின்றேன்.

எனவே இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவையாகும். எனது தந்தை காமினி திஸாநாயக்க மற்றும் ரணசிங்க பிரமேதாசவுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன.

எவ்வாறிருப்பினும் மீண்டும் எனது தந்தை பிரேமதாசவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கட்சியின் பிரதி தலைவராக நியமனம் பெற்றார். அவருக்கு அவ்வாறு செய்ய முடியும் என்றால் ஏன் எம்மால் முடியாது? 

ஐ.தே.க.வினருக்கு இதனால் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது. ரணில் - சஜித் என்றாவது ஒரு நாள் பேச்சுவார்த்தை நடத்தி இணையும் வரை இந்த நாட்டுக்கு எழுச்சி இருக்காது என்றார். 

 (எம்.மனோசித்ரா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »