Our Feeds


Monday, March 24, 2025

SHAHNI RAMEES

தேசபந்துவை பதவி நீக்கி, புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு - சம்பிக்க

 


பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது பல மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்பட்டுள்ளன. இவரது நியமனத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசபந்துவை பதவி நீக்கி, பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பாராளுமன்றத்துக்கு ஒரு விசேட பிரேரணையை கொண்டு வந்தால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்த நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் மாத்திரம்  28 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 சம்பவங்கள் ஒழுங்கமைக்கபபட்ட பாதாளக்குழுக்களின் செயற்பாடு என்று பொலிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது மிகவும் பாரதூரமானது.

இந்த நாட்டில் விடுதலை புலிகள் அமைப்பின் தாக்குதல் காலத்தில் கூட பாதாளக்குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படவில்லை. இவ்வாறான நிலைமை தேர்தல் பணிகளுக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டின் பொலிஸ்மா அதிபர் சிறைச்சாலையில் உள்ளார். பொலிஸ்மா அதிபர் பதவி வறிதாகியுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரே உள்ளார்.இவ்வாறான நிலையில் பொலிஸ் சேவை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்துக்குள் பிளவுகள் காணப்படுகிறது.

பொலிஸ் சேவையின் சிரேஷ்டத்துவ நிலையின் அடிப்படையில் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் நான்காவது நிலையில் உள்ளார். இரண்டாவது நிலையிலும் ஒருவர் உள்ளார்.

இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரியுடன் தன்னால் இணக்கமாக செயற்பட முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். ஆகவே பொலிஸ் சேவையில் கீழ் மற்றும் மேல்நிலை பதவிகளில் முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் பிரயோகிக்கிறது.நீதிமன்ற  விசாரணைகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின்  இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுகிறது.

பொலிஸ் சேவை அரசியலாக்கப்பட்டுள்ளது.அண்மையில் 130 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் முறையான காரணிகள் ஏதுமில்லாமல் இடமாற்றம் செய்துள்ளனர். இலங்கை பொலிஸ் சேவை தேசிய மக்கள் சக்திக்கு  சொந்தமானதல்ல என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படுவதில்லை. ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கடந்த கால குற்றங்களை தோண்டி ஆராயும் அரசாங்கம் தேசபந்து தென்னகோனை கைது செய்ய ஏன் அவரது ஹோகந்தர வீட்டுக்கு செல்லவில்லை. இதுவே ஜனாதிபதியின் இரட்டை நிலைப்பாடு.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு பேரவையின் வழிமுறைகளுக்கு முரணாகவே தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

 தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமித்தது அரசியலமைப்புக்கு முரண் என்று அறிவிக்ககோரி  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததை பொதுமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர்  ஆகியோரை பதவி நீக்குவதற்கு 2002 ஆம் ஆண்டு விசேட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை மீளாய்வு செய்து பாராளுமன்றத்துக்கு ஒரு பிரேரணையை ஜனாதிபதியால் கொண்டு வர முடியும்.அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது.

தேசபந்துவை பதவி நீக்க ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆகவே தேசபந்துவை பதவி நீக்கி புதியவர் ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »