வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான மார்ச் 3ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனத்துங்க தெரிவித்தார்.
தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் திங்கட்கிழமை (24) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான மார்ச் 3ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் வேட்பாளர்களாவதுடன் ஏனைய 22 பேர் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ஆதரவாளர்களாவர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக பொலிஸாரால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இம்முறை தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கிறேன். தேர்தல் செலவு ஒழுங்கமைப்பு சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கான செலவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேர்தல் செலவு ஒழுங்கமைப்பு சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாராளுமன்றத் தேர்தலின் போது விதிமுறைகளை மீறிய வேட்பாளர்கள் உட்பட 1239 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுகிறேன் என்றார்.