மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே
நகரருகே நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் பலியாகி உள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கையும், காயங்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மியான்மர் ராணுவம் தலைமையிலான அரசின் மூத்த ஜெனரல் மின் ஆங் லாயிங் தொலைக்காட்சியில் தோன்றி பேசும்போது கூறினார்.
இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுடன் ரத்த நன்கொடைக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நிவாரண பணிகளுக்கு ஐ.நா. அமைப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.