(செ.சுபதர்ஷனி)
சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. சீனா மாத்திரமல்ல இலங்கை உட்பட உலகில் உள்ள பல நாடுகளிலும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகையால் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை பெறுவது பாதுகாப்பானது என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார்.
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்றுக் குறித்து புதன்கிழமை (8) இலங்கை மருத்துவ சங்கத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீபகாலமாக சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று காரணமாக, இலங்கை உட்பட பல உலக நாடுகள் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதாக வீண் அச்சமடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் தகவல்கள் மக்களை இவ்வாறு பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உண்மையில் சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” வைரஸ் தொற்று மாத்திரமல்ல மேலும் பல வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. ஆகையால் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.
சீனா மாத்திரமல்ல இலங்கை உட்பட உலகில் உள்ள பல நாடுகளிலும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆகையால் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை பெறுவது பாதுகாப்பானது. குளிர்காலங்களில், அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவ்வாறான பல வைரஸ் தொற்றுக்களும் சுவாச நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. கோவிட் – 19 பரவிய காலத்தில் அது உலகுக்கு புதிய வைரஸ் வகையாக இருந்தது. எனினும் எச்.எம்.பி.வி புதிய வைரஸ் வகை அல்ல.
இது 2001 ஆம் ஆண்டு முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல நாடுகளிலும் மேற்படி வைரஸ் பரவலாக பரவியுள்ளது. இலங்கையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இவ்வைரஸ் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவ்வாண்டு கண்டியிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இரு தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இந்த வைரஸ் இலங்கையிலும் ஏனைய வைரஸ்களை போல குறிப்பிட காலப்பகுதியில் மாத்திரம் பரவியுள்ளது.
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், இக்காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏனைய தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு பெறுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுருத்தியுள்ளது. எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றாளர் ஒருவரிடம் வைரஸ் காய்ச்சலுக்கான தடிமன், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். சிறுவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றார்.