Our Feeds


Friday, January 24, 2025

Sri Lanka

Clean Srilanka வேலைத்திட்டம் முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும்!


கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும்.  உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இவ்வாறான வேலைத்திட்டத்தினூடாக பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியிலும் பெரிய மாற்றங்களை அடைந்துள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

அவ்வாறான நல்லெண்ணத்துடன் இங்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டால் அவ்வேலைத்திட்டம் சிறப்பாக வளர்ச்சியடைந்து நாட்டுக்கு நன்மை சேர்க்க நாம் பிரார்த்திக்கின்றோம்.

இத்திட்டம் தொடர்பில் பிரதமர் சபையில் தெளிவுபடுந்தியிருந்தாலும் இன்னும் இத்திட்டமானது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவாகச் சென்றடையவில்லை.

அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறும், இவ்வேலைத்திட்டத்தை தாம் வரவேற்பதோடு, முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவுருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக, சிங்கப்பூர் ஏனைய நாடுகள் இத்திட்டத்தினூடாக எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்று பார்க்கும் போது, இத்திட்டமானது உள்ளூராட்சி மன்றங்களில்லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

எனவே, நாம் உள்ளூராட்சி மன்றங்களை இத்திட்டத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டும். அதற்கான ஆளனி, இயந்திர வசதிகள் எம்மிடமிருக்கிறது. அவர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளல், வடிகான் துப்பரவு, மரங்களை நடுதல், கிராமங்களை அழகுபடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளலாம்.

அதே போல், தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் திறந்திருப்பதால் அதிகமான வயல்நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெட்டுவதற்கு ஆயத்தமாக நிலையில், முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவரது உரையில் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »