Our Feeds


Thursday, January 30, 2025

Zameera

இலங்கை –அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அனில் ஜயந்த தெரிவு


 பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் அண்மையில் (24) தெரிவுசெய்யப்பட்டார்.

 

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை –அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது தொடர்பான விசேட கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.

 

இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

இதில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான (பேராசிரியர்) அனில் ஜயந்த தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

 

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,


இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இது இலங்கைக்கான முக்கிய நட்புறவு நாடுகளில் ஒன்றாகும் என்றார்.

ஜனநாயக நாடுகள் என்ற ரீதியில் இருதரப்பு உறவுகளும் பரஸ்பர நன்மைகள் மற்றும் ஜனநாயக ஆட்சியின் விழுமியங்களைப் பலப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். 


அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு போன்ற பரந்துபட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக் காணப்படுகின்றமையையும் அவர் நினைவுகூர்ந்தார். அத்துடன், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

 

இங்கு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிடுகையில்,


இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகள் 76 வருட வரலாற்றைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இரு நாடுகளும் நண்பர்களாகவும், பங்காளர்களாகவும் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

கல்வி, அனர்த்த முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரப் பகிர்வு போன்ற விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பு பரஸ்பர வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாகவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.


இலங்கை அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட தொழில் அமைச்சரும், பொருளாதார பிரதியமைச்சருமான (பேராசிரியர்) அனில் ஜயந்த உரையாற்றகையில்,


இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் காணப்படும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார்.


சட்டமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களை உருவாக்குவதன் அவசியத்தை இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »