எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த பயங்கரவாதத் தடைச் சட்டம் ஏன் இன்னும் அமுலில் காணப்படுகின்றது?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி!
அப்போது நாட்டில் இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3 தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து, 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த சட்டத்தை அமுலாக்கும் விடயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிர்கருத்து கொண்டோர், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இலங்கை கையொப்பமிட்ட மற்றும் அதற்குக் கட்டுப்பட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும் வெளியிலும் கருத்து தெரிவித்திருந்தமையால், இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (08) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், அதனைத் திருத்துவதற்கு அரசாங்கம் முன்வைக்கும் மாற்றுத் தீர்வுகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து தொடர்பிலும், இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமல் கைது செய்வது உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.