Our Feeds


Thursday, January 2, 2025

Zameera

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்


 உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு நேற்றை தினம் (31) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது. எந்தவொரு சமூக,பொருளாதார காரணங்களை அடிப்படையாக கொண்டும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.

குழந்தை பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருடகால பாடசாலை கல்வி உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும். தனிநபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதை கல்வியின் பிரதான இலக்காகக்கொள்வது மிக முக்கியமாகும்.

மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கென பரிணாமமடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசு செயற்படுகிறது.

சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம். நீண்டகால பிரதிபலன்களைக் கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலைத்திட்டங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »