Our Feeds


Wednesday, January 29, 2025

Zameera

திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்


திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய தொழில்துறை சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் ஆகியவை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, 0-30 வரையிலான வீட்டுப் பிரிவிற்கான அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவிலிருந்து 4 ரூபாவாகவும், 31-60 வரையிலான பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுப் பிரிவிற்க்கு 20 சதவீதமும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 21 சதவீதமும், ஹோட்டல்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறை துறைக்கு 30 சதவீதமும், பொதுத்துறைக்கு 12 சதவீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

அரசு நிறுவனங்கள் மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »