விவசாயிகளிடம் இருந்து 130 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு முடியுமாயின், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் என தாம் சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
இதுவரையில் மோசமானதொரு பொருளாதார கொள்கை ஒன்று பின்பற்றப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
அவ்வாறாயின் எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவுள்ள பொருளாதார கொள்கை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்.
அரசாங்கம் கூறுகின்ற விடயம் உண்மையானால் புதிய வேலைத்திட்டம் ஒன்றுக்குச் செல்ல வேண்டும்.
எனவே, எதிர்வரும் நாட்களில் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்கும் என நாம் நம்புகின்றோம்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறியிருந்தது.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியை அடுத்தே அவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
தனிநபர்களுக்கான வருடாந்த வரி சலுகை எல்லை 12 இலட்சம் ரூபாவிலிருந்து 27 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தற்போதைய ஆளும் தரப்பினர் கூறியிருந்தனர்.
இதனை நம்பிய சகல தொழிற்துறையினரும் அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.
எனினும் தற்போது ஒரு இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரிக்கான எல்லையை ஒரு இலட்சத்து 50,000 ரூபாய் வரையில் மாத்திரமே அதிகரிக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது.
அதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்ட வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் இந்த விடயம் எழுதப்பட்டிருக்கவில்லை.
பால், முட்டை உள்ளிட்ட உணவுகள், மருந்துகள் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான வற் வரி நீக்கப்படும் என அறிவித்திருந்தனர்.
எனினும் தற்போது பல உணவுப் பொருட்களுக்கு விசேட பண்ட வரியை அறவிடுவது தொடர்பான யோசனை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பருப்பு, சீனி, செமன் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சகல உணவுப் பொருட்களுக்கும் அறவிடப்பட்ட வரியைத் தொடர்ந்தும் அவ்வாறே முன்கொண்டு செல்வதற்குக் கோருகின்றார்கள்.
இருப்பினும் தேர்தலுக்கு முன்னர் வரியை நீக்குவதாகவே இவர்கள் உறுதியளித்திருந்தனர்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் தேர்தலுக்கு முன்னர் கூறிய விடயங்களுக்கும் தேர்தலின் பின்னர் கூறுகின்ற விடயங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சில பகுதிகளில் சிவப்பு பச்சை, அரிசி கிலோ கிராமொன்று 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அரசாங்கம் அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலையை 220 ரூபாவாக விதித்துள்ளது.
அதேபோன்று சிவப்பு, பச்சை அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. வரிசைகள் மீண்டும் நீள்கின்றன.
தற்போது நெல்லுக்கான கொள்வனவு விலையாக 110 ரூபாவை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தெரியவந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை 130 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கோரி, பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த தரப்பினர் தற்போது 110 ரூபாவாக அதனைக் குறைக்கின்றனர்.
முன்னர் நுகர்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
எனவே, முடியுமாயின் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை 130 ரூபாவாக அதிகரிக்குமாறு தாம் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வாறு முடியாவிட்டால், எதற்காகப் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.