Our Feeds


Wednesday, January 29, 2025

Sri Lanka

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு!


கடந்த காலங்களை மறந்து  மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  திங்கட்கிழமை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை, கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் '2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யும் தீர்மானத்தை கட்சி எடுத்தது.

அந்த தீர்மானத்துக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம். கட்சிக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'இந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாறாக அரசியல் பழிவாங்களுக்கு  விசேட கவனம் செலுத்துகிறது. ஆகவே கடந்த காலங்களை மறந்து அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலப்பகுதிகளில் மாவட்ட மட்டத்தில் புதிய தொகுதிகளை அமைப்பதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சி மட்டத்தில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமிப்பதற்கும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »