Our Feeds


Friday, January 17, 2025

Zameera

சீனா, இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாக கையாளுவது சவாலானது


 சீனா,  இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக்  கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும் எனவும் இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியாளர்கள் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள். ஆகவே, சீனாவுடன் அல்லது பொதுவுடைமை தத்துவத்தை வைத்திருக்கின்ற நாடுகளுடன் அவர்கள் தொடர்புகளை வைத்திருப்பது புதிய விடயம் அல்ல.

அதேவேளை, மிகவும் அண்மைய நாடாக இருக்கும் இந்தியாவுடன் நிச்சயம் நெருக்கமான தொடர்பு பேணப்பட வேண்டும். இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலிலே இந்தியாவுக்குச் சென்று வந்துள்ளார். ஆகவே, இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணுவதற்கான சமிக்ஞை வெளிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளையில், தங்களுடைய பொருளாதாரக் கொள்கையுடன் இணங்கிச்  செயற்படுவதாகக் கருதுகின்ற சீனா அரசாங்கத்துடனும் அநுர தரப்பினர் தொடர்புகளைப் பேணுகின்றனர். இந்த இரண்டு தொடர்பாடல்களையும் எந்தவகையில் கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால், இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகள் அல்ல. அந்தப் பூகோள உண்மையும் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரியும். ஆகவே, நட்பு நாடுகளாக இல்லாத இரண்டு வல்லரசு நாடுகளுடன் சம தூரத்தில் இருந்து, சமநிலையாகக் கொண்டு செல்வது சவாலுக்குரிய விடயமாகும். எனவே, இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »