Our Feeds


Tuesday, January 28, 2025

SHAHNI RAMEES

ஒடுக்குமுறைகளால் பாதிப்புற்ற ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பாதீர் - பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளர்.

 

மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மியன்மாரை சேர்ந்த பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர ரோஹிங்கியா கூட்டிணைவு எனும் அமைப்பின் ஸ்தாபகருமான நே சான் வின், இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கிய அகதிகளை அரசாங்கம் மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்பக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் மியன்மாரிலிருந்து இலங்கையை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்கியர்கள் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் 'ரோஹிங்கியாக்கள் என்போர் யாவர்?' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று சமூக, சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (27) மாலை கொழும்பிலுள்ள சமூக, சமய நடுநிலையத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நிகழ்நிலை முறைமை ஊடாக இணைந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே நே சான் வின் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி ரோஹிங்கியர்கள் நாடற்றவர்கள் அல்ல எனவும், மாறாக அவர்கள் மியன்மாரின் அரக்கான் பகுதிக்கு உரித்துடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய அவர், ரோஹிங்கியர்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பகிர்ந்துகொண்டார்.

அதேவேளை இக்கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ரூக்கி பெர்னாண்டோ, அண்மையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் மற்றும் அவர்களது தற்போதைய நிலைவரம் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.

அதேபோன்று ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, அந்த அகதிகளைத் திருப்பியனுப்புவது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அறிவித்தமை ஓரளவுக்கு ஆறுதலளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் ரோஹிங்கிய அகதிகள் நாட்டை வந்தடைந்த வேளையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட குறுகிய நேர்காணல் காணொளிகள் ஆங்கில உபதலைப்புடன் திரையிடப்பட்டன. அந்நேர்காணல்களில் தாம் மியன்மாரில் தொடர்ச்சியாக மிகமோசமான ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவந்ததன் காரணமாகவே, அங்கிருந்து தப்பி இலங்கையை வந்தடைந்ததாகவும், தமக்கு ஏதேனுமொரு வகையில் உதவுமாறும் அந்த அகதிகள் கேட்டுக்கொண்டனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »