உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான
வேட்புமனுக்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த வருடத்தின் இறுதிக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நிச்சயம் நடத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உள்ளுராட்சி மன்றத்தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படவில்லையெனின் அதனை இந்த மாதத்திலேயே நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.
அதன்பின்னர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இடையூறு ஏற்படாத வகையில் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
திறைசேரியூடாக உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயிருந்தது.
இந்நிலையில், ஏலவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில வேட்பாளர்கள் இயற்கை எய்தியுள்ளமை உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அத்துடன், புதிய வாக்காளர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது.
இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள வேட்புமனுக்களைச் செல்லுபடியற்றதாக்கி புதிய வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையிலேயே திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்படுகின்றது என்றார்.