நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த கால அவகாசம் போதுமானதாக இல்லாமையினால், அதனை இன்று வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இன்றைய தினத்திற்குப் பின்னர் தனியார்த் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசி மீள அனுப்பப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கை சுங்கத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து அரிசி கையிருப்புகளும் இன்றைய தினத்திற்குள் விடுவிக்கப்படும் எனச் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் 1 இலட்சத்து 27 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகளவான அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.