Our Feeds


Wednesday, January 29, 2025

Zameera

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்


 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று (28) இரவு ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நேற்று(28) அதிகாலை இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி இயங்கியதால் இருவர் காயமடைந்தனர்

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது. 

கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »