Our Feeds


Wednesday, January 8, 2025

Sri Lanka

தாய்வான் தனி நாடு அல்ல, சீனாவின் ஒரு மாநிலம் அவ்வளவுதான் | இலங்கை அரசு “ஒரே சீனா” கொள்கையை கடைப்பிடிக்கும். - அமைச்சரவை முடிவு



சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. 

 

இதன்படி, இலங்கை அரசு 'ஒரே சீனா' கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 

இதன்படி, சீன மக்கள் குடியரசை மாத்திரம் சட்டரீதியான சீனாவாக ஏற்றுக் கொள்வதற்கும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

இதேவேளை, இலங்கையை, சீன சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான சுற்றுலா மையமாக நிலைப்படுத்தும் நோக்கில் சீன ஊடகக் குழுமத்துக்கும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 

அதேநேரம், இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தேவைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது. 

 

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவர்களுக்குச் சீனாவினால் 35.7 மில்லியன் யுவான் செலவில் வழங்கப்பட்ட அவசர மனிதாபிமான உதவி பொருட்கள் கடந்த ஆண்டு கடற்றொழில் அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டது. 

 

இந்தநிலையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான குறித்த அவசர மனிதாபிமான உதவி வழங்கல் சான்றில் கைச்சாத்திடுவதற்காகக் கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 

இதேவேளை, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும், சீனாவில் உள்ள சில நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

 

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைய, 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »